search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் பயணி"

    கோடைகாலத்தை முன்னிட்டு அரசு பஸ் பயணிகளுக்கு தாகம் தணிக்க குடிநீர் வழங்கும் டிரைவர் மற்றும் கண்டக்டரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதையொட்டி வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தற்போது அக்னி நட்சத்திரம் என்பதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    இந்தநிலையில் பஸ்களின் பயணம் செய்யும் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் வகையில் ஒரு அரசு பஸ்சில் தினமும் பயணிகளுக்கு டிரைவர் -கண்டக்டர் குடிநீர் வழங்கி வருகின்றனர். அவர்களின் இந்த மனித நேயம் பொதுமக்களின் அமோக பாராட்டை பெற்று உள்ளது.

    தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் இருந்து செங்கிப்பட்டிக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 20 லிட்டர் குடிநீர் கேன் வைத்து பயணிகளுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர். தினமும் தங்கள் சொந்த செலவில் டிரைவரும்- கண்டக்டரும் அதனை வழங்கி வருகின்றனர். அரசு செய்யாத இந்த பணியை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டிருப்பது அனைவருக்கும் முன் உதாரணமான செயலாக கருதப்படுகிறது. இதுபோல் மற்ற அரசு பஸ்களிலும் கோடை காலத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக கண்டக்டர் செல்வராஜிடம் கேட்டபோது, கோடை தாகத்துக்காக நாங்கள் பாட்டிலில் கொண்டு வரும் குடிநீரை சில பயணிகள் வாங்கி குடிப்பார்கள் அப்போது எங்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வந்தது. மேலும் ஒரு முறை பயணம் செல்ல 1 மணி நேரத்துக்கு மேலாகும் போது பல பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதி படுவதை கண்டோம்.

    இதைத்தொடர்ந்து குடிநீர் கேன் கொண்டு செல்ல உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று குடிநீர் வழங்கி வருகிறோம். இந்த சின்ன உதவி எங்களுக்கு பெரிய மன நிறைவை தருகிறது என்றார்.

    ×